கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
நகர்ப்புற புதுப்பித்தல் மசோதாவை விமர்சிப்பவர்கள், அரசாங்கத்தின் நோக்கங்களைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை நேரில் சென்று காண வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
"மசோதாவை விமர்சிக்கும் சிலர், ஒரே அறை கொண்ட ஒரு குடியிருப்பில் ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் வசிப்பதை ஒரு போதும் பார்த்ததில்லை. அவர்கள் யோசிப்பதி இல்லை. வெறும் கோட்பாட்டு அளவிலேயே பேசுகிறார்கள்” என இன்று கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இந்த மசோதா மலாய்க்காரர்களை நகர்ப்புறங்களிலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்றுக்களை அன்வார் மீண்டும் நிராகரித்தார்.
“ஏழை மலாய்க்காரர்கள் பலர் உள்ளனர். மேலும் பல பகுதிகளில் ஏழைகளாக இந்தியர்களும் உள்ளனர். இது போன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








