கொரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு வேலை இழந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி, போலி ஆவணங்களை சமர்ப்பித்து. சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவை ஏமாற்றியதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் இன்று ஜோகூபாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
30 வயது கே. சிவலிங்கா என்ற அந்த நிறுவன உரிமையாளர் தனது நிறுவனத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் எந்தவொரு தொழிலாளரையும் வேலைக்கு அமர்த்தாமலேயே ஆட்கள் வேலை செய்து வருவதைப் போல சொக்சோவின் பெஞானா கெர்ஜாயா திட்டத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 760 வெள்ளியை பெறுவதற்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி செய்ததாக அவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிவலிங்கா, இக்குற்றத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி ஜோகூர்பாரு சொக்சோ அலுலகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 417 ஆவது பிரிவின் கீழ் சிவலிங்கா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








