பினாங்கில் தேசிய அளவில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து மற்றும் கடவுன் வாழ்த்துப் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பொறுப்பான அதிகாரி குறித்து கல்வி அமைச்சு விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என்று டிஏபியைச் சேர்ந்த செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், இன்று மேலவைக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
தமிழ் வாழ்த்துப் பாடுவதற்கு தடை விதித்ததாக இதற்கு முன்பு கூறப்பட்ட அதிகாரி, உண்மையிலேயே பலி கடா ஆக்கப்பட்டதாக ஆதாரங்கள் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட டாக்டர் லிங்கேஸ்வரன், அண்மையில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுடன் நடத்தப்பட்ட ஓன்லைன் சந்திப்பின் கூட்டக் குறிப்பை ஆராயும்படி கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அண்மையில் மக்களவையில் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், தமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி அந்த அதிகாரி, தனது மேல் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்றி இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
அப்படியென்றால், இந்த உத்தரவை பிறப்பித்த கல்வி அமைச்சின் அந்த உயர் அதிகாரி யார், அவர் உடனடியாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.








