சிலாங்கூர் மாநில அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தவிர்த்து, அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தேசியப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள் மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட தகுதி பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நிதி தாமதத்தால் பள்ளிகளின் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நிதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்களையும், ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி கிடைக்கும் தேதியையும் மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மேலும், பள்ளிகள் தங்களது நிதி விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பதுடன் நின்றுவிடாமல், அது உரிய நேரத்தில் பள்ளிகளைச் சென்றடைவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டார்.








