பிரதமர டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டிற்காக மிகச் சிறந்தவற்றை செய்வதற்கு உறுதி பூண்டிருந்தாலும், அவர் ஒரு நல்ல அமைச்சரவைக்குழுவினரை கொண்டிருக்கவில்லை என்று ஜோகூர் இளவரசர் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முடிவு எடுப்பதில் அன்வார் தைரியமாக செயல்பட வேண்டும். அந்த முடிவுகள் பெருவாரியான மக்களை குஷிப்படுத்துவதாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக நாட்டிற்கு எது சிறந்து என்பதை துல்லியமாக கவனித்து, திடமாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஜோகூர் இளவரசர் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடின், அம்னோ முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்காஸ்ட் கெலுவார் ஸ்கெஜாப் நிகழ்ச்சியில் பேசுகையில் இளவரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்வார் நல்ல அமைச்சரவைக்குழுவினரை கொண்டுள்ளாரா? இல்லையா? என்பது குறித்து தம்மால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று இளவரசர் குறிப்பிட்டார்.
தம்மைப் பொறுத்தரையில் அன்வார் நிறைய முடிவுகளை துணிந்து எடுக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான நாட்டை அவர் காண விரும்பினால் சில விவகாரங்களில் அவர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். பெரும்பலானாவர்களை குஷிப்படுத்துதற்காக அந்த முடிவுகள் இருந்து விடக்கூடாது. பாதுகாப்பான வழியாகவும் அது இருக்கக்கூடாது. மாறாக நாட்டின் நலனை முன்நிறுத்தி அந்த முடிவுகளை அவர் எடுக்க வேண்டும் என்று துன்கு இஸ்மாயில் குறிப்பிட்டார்.








