தெமர்லோ, ஆகஸ்ட்.09-
நாட்டில் வனங்களையொட்டிய பிரதானச் சாலைகளைக் கடக்கும் போது யானைகள் வாகனங்களில் மோதி, விபத்துக்குள்ளாகி பலியாவதைத் தடுப்பதற்கு யானை நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் எச்சரிக்கைப் பலகைகளைப் பொருத்தும் நடவடிக்கையில் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா இலாகா ஈடுபட்டுள்ளது.
இடர் நிறைந்த சாலைப் பகுதிகளில் யானைகள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து வாகனமோட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்முயற்சி நடவடிக்கையில் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா இலாகா ஈடுபட்டுள்ளது என்று அதன் தலைமை இயக்குநர் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.
யானைக் கூட்டங்க! அடிக்கடி சாலைகளைக் கடக்கும் பகுதிகளான கெடா, கோல மூடா, கிளந்தான் ஜெலியையும், பேரா கிரிக்கையும் இணைக்கும் கிழக்கு மேற்குச் சாலை, திரெங்கானு ஜெர்த்தே போன்ற பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் பொருத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.








