கோத்தா கினபாலு, செப்டம்பர்.11-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கில், முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகளைத் தொடர்புபடுத்தி முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதற்காக பெண் ஒருவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை அமர்வு நீதிமன்ற நீதிபதி மார்லீனா இப்ராஹிம் முன்னிலையில், 32 வயதான அஸ்மாஸியா சேடேக் என்ற அப்பெண் மீது, இணைய வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதே வேளையில், தன் மீதான குற்றச்சாட்டை அஸ்மாஸியா சேடேக் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு 10,000 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டது.
முன்னதாக, தனது முகநூலில் அஸ்மாஸியா வெளியிட்டிருந்த தகவலில், மாணவி ஸாரா வழக்கில், மாநில ஆளுநர், அமைச்சர், காவல்துறை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஆகியோரின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








