ஈப்போ, ஸ்டேஷன் 18 பகுதியில் சிம்பாங் பூலை-லாஹாட் சாலையில் இன்று மாலை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்தன.
சம்பவம் குறித்து மாலை 4.26 மணிக்கு தகவல் கிடைத்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
தகவலறிந்த பாசீர் புத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
மரம் விழுந்ததில் பெரோடுவா பெஸ்ஸா மற்றும் பெரோடுவா அல்ஸா ஆகிய இரண்டு கார்கள் சேதமடைந்தன. இரு கார்களிலும் இருந்த ஆறு பேரையும் பொதுமக்கள், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே வாகனங்களிலிருந்து வெளியேற்றினர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.








