வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் தொழிற்துறையினருக்கான மின்சாரக் கட்டணங்களை நியாயமான முறையில் நிர்ணயிப்பதற்கான புதிய நடைமுறை குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகத் துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் தொழிற்துறையினருக்கு வெவ்வேறு மின்சாரக் கட்டண விகிதங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதன் படி, வீட்டு உபயோகிப்பாளர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்றும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள எரிசக்தி ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபகற்ப மலேசியாவில் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கான 800 கிலோவாட் மணி, மின்சார மானிய வரம்பை இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கத் திட்டமுள்ளதா? என்றும், அண்மைக்காலமாக வீடுகளின் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்றும்? ஷா ஆலாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யுசோஃப் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஃபாடில்லா யூசோஃப், மேற்காசிய புவிசார் அரசியல் நெருக்கடியால் உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20 விழுக்காட்டைக் கையாளும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு இடையூறுகளும் எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மலேசியா பயன்படுத்தும் எரிபொருளில் சுமார் 40 விழுக்காடு இந்த முக்கிய கடல்வழிப் பாதையுடன் தொடர்புடையது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, மலேசியாவில் நீடித்த அதிக வெப்பநிலையால் மக்கள் குளிரூட்டிகளைப் பயன்படுத்தும் நேரமும் அடிக்கடியான பயன்பாடும் அதிகரித்துள்ளன.
அதேவேளையில், வறண்ட வெப்பநிலையால் நீர்மின் உற்பத்தி குறைந்ததும், நிலக்கரி மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகளால் மின் உற்பத்தி தடைப்பட்டதும், இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜி மீது அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளதாக ஃபாடில்லா யூசோஃப் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு மலிவான மின்சாரக் கட்டணங்களை உறுதிசெய்வதுடன், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழிற்துறையினருக்கும் போட்டித்தன்மை வாய்ந்த கட்டணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.








