பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரும் கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட மோதல்களை விட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளே தமக்கு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட புகார்களை விட பொருளாதார சவால்கள் மிகவும் தீவிரமானவை. எனவே, அனைவரும் நிதானமாக இருக்க வேண்டும்," என்று பாண்டான், கம்போங் செராஸ் பாரு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டு விட்டு, செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.
தொடர்ச்சியாக PKR கட்சித் தலைமையைக் விமர்சித்து வரும் ரஃபிஸிக்கு எதிராக பி.கே.ஆர் மேலிடம் நேற்று இரண்டாவது முறையாகக் கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "தைரியமிருந்தால் என்னைக் கட்சியிலிருந்து நீக்குங்கள்" என்று ரஃபிஸி சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, நீதித்துறை நியமனங்களில் தலையீடு இருப்பதாகக் கூறி ரஃபிஸி உள்ளிட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை கோரியதைத் தொடர்ந்து, அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜோகூர் சேர்ந்த 19 பி.கே.ஆர் தொகுதிகள் வலியுறுத்தியுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களை விட, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலேயே அரசு முழுக் கவனம் செலுத்தும் என்று அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.








