May 5, 2026
Thisaigal NewsYouTube
சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தளப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்க: டத்தோ ஹஜி ஹெல்மி அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தளப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்க: டத்தோ ஹஜி ஹெல்மி அறிவுறுத்தல்

Share:

கூலிம், பிப்ரவரி.13-

ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இனம், மதம் அல்லது வழிபாட்டுத் தளங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹஜி ஹெல்மி பின் யூசோப் வலியுறுத்தியுள்ளார்.

வழிபாட்டுத் தளங்கள் தொடர்பான விவகாரங்களை இனம் மற்றும் மத ரீதியாக அணுகுவதைத் தவிர்த்து, நாட்டின் சட்டத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட்டால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாவட்டங்களிலுள்ள வழிபாட்டுத் தளங்களின் நிலம் மற்றும் இதர சிக்கல்களைக் கண்டறிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி வழங்கியிருப்பதை வரவேற்ற அவர், நாட்டில் வழிபாட்டுத் தளங்களை அமைப்பதற்கான தெளிவான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டினார். இந்த விதிமுறைகளை அனைவரும் முறையாகப் பின்பற்றினாலே தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்றும், உணர்ச்சிப்பூர்வமான இனம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களைப் பேசும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூலிம் மாவட்டத்திலும் பல வழிபாட்டுத் தளங்கள் நிலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த டத்தோ ஹஜி ஹெல்மி, நகராண்மை கழகத்தின் கவனத்திற்கு வரும் புகார்கள் முறையாக ஆராயப்படும் என்றார். முதலில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்தாலோசித்த பின்னரே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

Related News