எதிர்வரும் 2024க்குள் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமைச்சரவை சீரமைப்பு எப்போது செய்யப்படும் என்பது குறித்து ஊடகங்கள் சார்பில் 12 வயது சிறுவனான அக்மால் அஃபிஃப் யாசீர் அரஃபாட் என்ற சிறுவனை அழைத்து மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் பிரதமர் அன்வார்.
அமைச்சரவையில் எப்போது மாற்றம் நிகழும் என சிறுவம் அக்மால் பிரதமரை வினவ, எப்போது நடக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறதோ, அப்போது நடக்கும் எனப் பதிலளித்தார் பிரதமர்.
தமது பரிந்துரையாக 2024 ஆம் ஆண்டு நடக்க வேண்டும் என அக்மால் குறிப்பிட அவ்வாண்டுக்கு முன்னரா, பின்னரா என மறி கேள்வியைப் பிரதமர் கேட்டிருக்கிறார்.
2024க்கு முன்னர் என அக்மால் சொல்லவே, நிச்சயமாக என ஒப்புதல் வழங்கி இருக்கிறார் பிரதமர்.
முன்னதாக, அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் டாக்டர் சலிஹா முஸ்டாஃபா அமைச்சரவையில் நீக்கப்படலாம் என பிகேஆர் கட்சியின் உயர் மட்டத்தில் இருந்து தகவல் கசித்துள்ள நிலையில் அப்பதவியில் நடப்பு கல்வி அமைச்சரான ஃபட்லினா சிடெக் நியமிக்கப்படலாம் எனவும் கனிம வளம், சுற்றுச் சூழல், வானிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம் எனவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
இதனிடையே, ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினரான அமானா கட்சியின் அஸ்லி யூசோஃப், வெகு நாட்களாக காலியாக இருக்கும் உள்நாட்டு வாணிபம், வாழ்கைச் செலவின அமைச்சர் பதவியில் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.








