கிள்ளான், ஆகஸ்ட்.06-
கிள்ளான் அருகில் உள்ள பூலாவ் கெத்தாம் படகுத் துறையில் மாதுவும் அவரது மகளும் கடலில் விழுந்த சம்பவத்தில் அவ்விருவரின் சடலங்களும் காலை 7.30 மணியளவில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.
தாய் மற்றும் மகளின் சடலம் கடலில் மிதப்பதைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புதன்கிழமை காலை 6.39 மணியளவில் தனது 3 வயது மகளை அழைத்துக் கொண்டு படகுத் துறை வழியாக நடந்து சென்ற 41 வயதுடைய மாது கடலில் விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தனது மகளை அழைத்துக் கொண்டு அந்த மாது படகுத் துறையை நோக்கிச் சென்ற காட்சி, படகுத் துறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவில் தெரிய வந்துள்ளது.








