Aug 28, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு

Share:

முன்னாள் மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீது, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கோட்டா ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்காக மொத்தம் 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டி.வாய்.கே.பி இன்ஜினியரிங் சென்டிரியான் பெர்ஹாட்நிறுவனத்திற்கு 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்காக, அப்போது மனிதவள அமைச்சராக இருந்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தூண்டுதலாக, வெக்டிகா ரிசோர்சஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநர் தான் டெக் லிம் என்பவரிடமிருந்து, சையத் அமீருல் சையத் அகமது வழியாக இந்தப் பணத்தைப் பெற்றதாக சரவணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், மூன்று தவணைகளாக இந்தப் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் குற்றச்சாட்டின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி புக்கிட் ஜலில் கோல்ஃப் & கன்ட்ரி ரிசார்ட் -இல், தான் டெக் லிம் வழங்கிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை சையத் அமீருல் சையத் அகமது வழியாக சரவணன் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஜாலான் தெலாவி 3-இல், மேலும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை இதே நபர்கள் வழியாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது குற்றச்சாட்டு 5 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் தொடர்புடையது. தான் டெக் லிம் வழங்கியதாகக் கூறப்படும் மேபேங்க் இஸ்லாமிக் காசோலை, சையத் அமீருல் சையத் அகமதுவழியாகப் பெறப்பட்டு, பிக் செவன் வென்சர்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2022 ஆம் ஜூலை 7ஆம் தேதி ஜாலான் கிள்ளான் லாமா-வில் உள்ள வங்கி கிளையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் பெறப்பட்ட லஞ்சத் தொகைக்கு இணையாக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் 16 ஆவது B பிரிவின் கீழ் டத்தோஸ்ரீ சரவணன் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும், தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்து மூன்று குற்றச்சாட்டுகளையும் டத்தோஸ்ரீ எம். சரவணன் மறுத்து விசாரணை கோரினார். 58 வயதான சரவணன், நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜுலைலா ஜமாலுதீன், குற்றச்சாட்டுகளின் தீவிரம், சரவணன் ஒரு அரசியல்வாதி என்பதுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம் மற்றும் சாட்சிகளைப் பாதிக்கும் வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 8 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகை நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அரசுத் தரப்பின் மற்றொரு வழக்கறிஞர் அகமது அக்ரம் கரீப் உடன் ஆஜரான ஜுலைலா ஜமாலுதீன், சரவணனின் கடப்பிதழையும் பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

ஆனால், டத்தோ ஸ்ரீ சரவணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட், அரசுத் தரப்பு கோரிய ஜாமீன் தொகை நியாயமற்றதும் அதிகமானதும் என வாதிட்டார்.

தனது கட்சிக்காரர் விசாரணை முழுவதும் எஸ்.பி.ஆர்.எம்-க்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடியவர் அல்ல என்றும் கூறினார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து கலந்துகொள்வதையும் இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டினார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன், தனது பெயரை நிரபராதி என்பதை நிரூபிக்க உறுதியாக இருப்பதாகவும், சாட்சிகளைப் பாதிப்பார் என்ற அரசுத் தரப்பின் வாதம் வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் வாதிட்டார்.

டத்தோஸ்ரீ சரவணன் பல அறக்கட்டளைகளுக்குத் தலைமை வகித்து வருவதாலும், வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி அழைக்கப்படுவதாலும், அவரது கடப்பிதழை பறிமுதல் செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்தியாவின் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சரவணன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி அஸுரா அல்வி , டத்தோஸ்ரீ சரவணனை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார். அத்துடன் அவரது கடப்பிதழை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை.

எனினும், சரவணன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமாகவோ வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சாட்சிகளைத் தொடர்புகொண்டு அல்லது பாதிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் குறிப்பிடுதலுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

Related News