Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்
தற்போதைய செய்திகள்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

Share:

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் செனாய் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் போர் யாங், இப்பகுதி இந்தியச் சமூகத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைகள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அண்மையில், ஜெய் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், இந்தியச் சமூகத்துடனான தனது நீண்டகாலப் பிணைப்பை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, மடானி அரசாங்கத்தின் கல்வி அமைச்சர், டாக்டர் ஃபத்லினா சிடெக் அவர்களின் கூலாய் வருகையின் மூலம், கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கூடுதல் கட்டடப் பணிகளுக்காக 42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த மாதம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளன என்று வோங் போர் யாங் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கல்வி உரிமைக்கான இந்த மாபெரும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், கடந்த ஆண்டு வோங் போர் யாங் தனது சொந்த ஒதுக்கீட்டு நிதியிலிருந்து RM20,000-ஐ இத்தமிழ்ப்பள்ளியின் பலநோக்கு மண்டபத்திற்கு எல்இடி திரை அமைக்க வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளில் செனாய் தொகுதிக்கு உட்பட்ட இந்து ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இந்திய இயக்கங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், ஆலயங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் RM15,000-க்கும் மேல் நிதி ஒதுக்கீடுகளை வழங்கிச் சீரிய தொண்டாற்றியுள்ளார்.

அனைத்து இன மக்களின் கல்வி மற்றும் வழிபாட்டு உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்திட, தனக்கு மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News