ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.19-
பினாங்கு மாநிலத்தில் பல்வேறு நில வகைகளுக்கான வீட்டு வரி மற்றும் மனை வரி அடுத்த ஆண்டு 29 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை உயர்வு காணவிருக்கிறது.
எனினும் இந்த வரி உயர்வைக் குறைக்கச் செலுத்தப்படும் வரியில் 2026 ஆம் ஆண்டு 32.5 விழுக்காடு தள்ளுபடியும், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் முறையே 20 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
இந்த மனை வரி உயர்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்தில் நகரங்கள் மற்றும் புற நகரங்களில் எல்லை மறு சீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக வரி உயர்வு கண்டுள்ளது என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.
இந்த வரி உயர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








