Aug 3, 2026
Thisaigal NewsYouTube
2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது
தற்போதைய செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-

2027-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இடம் பெற வேண்டிய பரிந்துரைகள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்காக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனைகள் அடுத்த ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை நடைபெறும் என்றும், நிறுவனங்கள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களான MSME அமைப்புகள், சிறு வணிகர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள் என்றும் அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளில் பெறப்படும் பரிந்துரைகள் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தயாரிப்பில் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ABCD என்ற செயல்திட்டக் கட்டமைப்பின் அடிப்படையில் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டீவன் சிம், இதில் உற்பத்தித் திறன் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், நிதி அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை அணுகலை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக MSME மற்றும் கூட்டுறவுத் துறைகளின் போட்டித்திறனை வலுப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

அதேவேளையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தொழில் நடத்தும் செலவைக் குறைத்தல், அரசாங்கத்தின் சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தித் திறனை உயர்த்துதல் ஆகியவற்றுக்கும் இந்தக் கட்டமைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

நேற்று பினாங்கில் நடைபெற்ற மடானி விற்பனைத் திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த ஸ்டீவன் சிம், அத்தியாவசிய பொருட்களை 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் பொதுமக்கள் வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், சுமார் 80 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கு தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டதுடன், கூட்டரசு மற்றும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட 13 அரசாங்க முகமைகள் கலந்து கொண்டு தங்களது சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related News