மலாக்கா, டிசம்பர்.12-
தனது முதலாளிக்குச் சொந்தமான 37 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களைக் களவாடியதாக மலாக்கா, ஹாங் துவா ஜெயா நகராண்மைக்கழகத்தின் முன்னாள் பெண் உதவியாளர் ஒருவர் ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தி்ல் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது நுர்ஃபாராயின் ஷாருடின் என்ற அந்த மாது, மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ரதியா சைனுரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 27 ஆம் தேதி காலை 11.10 மணியளவில் மலாக்கா, லெபோ ஆயர் குரோ, காம்ப்ளெக்ஸ் மலாக்கா மால், ஹாங் துவா ஜெயா நகராண்மைக்கழகத்தின் அலுவலகத்தில் அந்த மாது இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டுச் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
தனது வீட்டில் களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள், சமூக ஊடகங்களின் வாயிலாக விற்கப்பட்டதைக் கண்ட அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்நது சம்பந்தப்பட்ட மாது கைது செய்யப்பட்டார்.








