நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி அரசாங்கத்தின் ஒற்றுமையையும் பரஸ்பர உடன்பாட்டையும் பேண வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் மலாய் மரபுவழிக் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட்டணி அரசாங்கத்தில் உள்ள சக கட்சிகளைத் தாக்கிப் பேசும் அமைச்சர்கள் அல்லது அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது பதவிகளைத் துறக்க நேரிடும் என பிரதமர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை என்றும், பிரதமர் விரும்பினால் தங்களை பதவியிலிருந்து நீக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், "பாதை மாறினாலும் நட்பு முறியக் கூடாது; ஒற்றுமை இருக்கும் வரை நாம் ஒரே வழியில் பயணிப்போம்" என பிரதமர் அன்வர் இப்ராஹிம் அரசாங்கக் கூட்டணிக்குள் இருக்கும் கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.








