ஜோகூர் பாரு, டிசம்பர்.22-
ஜோகூர், மாசாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த மோதல் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாசாய், பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயா பகுதியில் உள்ள ஒரு சீன உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
சுமார் 20 பேர் கொண்ட கும்பல், பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைப் பயன்படுத்தி இரண்டு நபர்களைத் தாக்கியது. இதில் ஒருவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் 17 முதல் 46 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் பேரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பொறாமை காரணமாக இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேக நபர்களிடமிருந்து ஏழு கைபேசிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.








