மலாக்கா, டிசம்பர்.10-
ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மற்றொருவரின் மனைவியுடன் அந்தரங்கத் தொடர்பில் இருப்பதாக பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மலாக்கா சட்டமன்றக் கூட்டத்தில் இன்று காலையில் பெரும் சலசலப்பும், அமளி துமளியும் ஏற்பட்டது.
மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடன் தனது மனைவி அந்தரங்கத் தொடர்பில் இருப்பதாக ஆடவர் ஒருவர் காவல் துறையில் அளித்துள்ள போலீஸ் புகாரை மேற்கோள்காட்டி பெரிக்காத்தான் நேஷனலின் ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ஜைலானி காமிஸ் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் அமளி துமளியாக மாறியதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் கெர்க் சீ யீ தலையிட்டு நிலைமைக் கட்டுப்படுத்தினார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் முன் வைத்த குற்றச்சாட்டை மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சால்லே கடுமையாகக் சாடியதுடன் அவரின் கேள்வி பொறுப்பற்றச் செயலாகும் என்று எதிர்வினையாற்றினார்.








