ஷா ஆலாம், நவம்பர்.15-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு, மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
Permodalan Negeri Selangor Bhd-ஆல் உருவாக்கப்படவுள்ள மலிவு விலை வீடமைப்பில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நேற்று காலை Melati Ehsan Consolidated Sdn Bhd என்ற கட்டுமான நிறுவனத்திடம் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 7 ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட போது, இந்த விவகாரம் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும், இது ஒரு விரிவான மேம்பாட்டுத் திட்டம் என்பதால், அது நிறைவடைய சில காலம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ள அமிருடின் ஷாரி, அதுவரையில் தற்காலிகமாக அவர்களுக்கு ஸ்மார்ட் சேவா வீட்டு வசதித் திட்டத்தில் இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கம்போங் பாப்பான் நில உரிமை விவகாரம், நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் இருந்திருந்தால், சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் அமிருடின் ஷாரி நேற்று 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜட் தாக்கலுக்குப் பிறகு தெரிவித்தார்.








