மத்திய கிழக்கு பகுதியில் நடந்து வரும் போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள எரிவாயு செயல்பாடுகளை முழுமையாக மீட்டெடுக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில், போக்குவரத்து அமைச்சு ஊழியர்களுடன் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பேசிய அவர், இந்த தகவலை கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி தன்னிடம் நேரடியாக தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரானது நாளை முடிவுற்றாலும் கூட, எரிவாயு செயல்பாடுகளை மீண்டும் தொடங்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும், முதற்கட்டமாக சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்கே அவ்வளவு காலம் தேவைப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தங்கள் மற்றும் டீசல் போன்றவற்றின் விலை உயர்வு நிலவி வரும் சூழலில், நன்றியுணர்வு என்ற கருத்தை பொதுமக்கள் சரியான சூழலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான பொருளாதாரச் சூழல்களில், நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாகச் சிலர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், நாம் இன்னும் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும், நாட்டின் நிலைமை வேறு சில நாடுகளைப் போல், கடுமையாக இல்லாமல் இருப்பதற்கும் நாம் நன்றியுள்ளவர்களாகவே இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவில், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ளவில்லை என்பதையும், நூற்றுக்கணக்கான நிலையங்கள் மூடப்படவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், மக்கள் தங்களை வருத்திக் கொண்டு வேலைக்கு நடந்து செல்லும் சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார்.
நன்றியுணர்வு அவசியமானது தான் என்றாலும், நாம் தற்போது கடந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளும், சோதனைகளும் உண்மை என்பதை மறுக்கத் தேவையில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








