Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பழைய இரும்புகள் கடத்தல்: 32 பேரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

பழைய இரும்புகள் கடத்தல்: 32 பேரிடம் விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜூலை. 28-

ஐந்து மாநிலங்களில் பழைய இரும்பு மற்றும் மின் கழிவு உலோகப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையில் விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் நடவடிக்கையில் கையூட்டு சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கான சாத்தியம் குறித்து குற்றவியல் சட்டம் 16 மற்றும் 19 ஆகிய பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட ஒரு தொழில் அதிபரிடம் எஸ்பிஆர்எம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதுவரையில் 332 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சுங்கத்துறை, வருமான வரி வாரியம், மத்திய வங்கியான பேங்க் நெகாரா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், சிலாங்கூர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஜுலை 14 ஆம் தேதி ஓப் மெட்டல் என்ற சோதனை நடவடிக்கைகையை எஸ்பிஆர்எம் ஏக காலத்தில் மேற்கொண்டது.

பினாங்கு மாநிலத்தில் ஒரு தொழில் அதிபருக்குச் சொந்தமான 8 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பத்து மாவூங்கில் உள்ள 3 பங்களா வீடுகள், தஞ்சோங் தோகோங்கில் உள்ள ஒரு பெந்த்ஹவுஸ் பங்களா வீடு, பாயான் லெப்பாஸில் ஒரு கடை, நிபோங் திபாலில் போர்ஷே சயேன், ரேஞ் ரோவர், பிஎம்டபல்யு, வோல்வோ, டொயோட்டா லேண்ட் குருஸெர் மற்றும் டொயோட்டா அல்பார்ட் ஆகிய ரகங்களைச் சேர்ந்த 8 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News