கோலாலம்பூர், டிசம்பர்.15-
சீன தனியார் இடைநிலைப்பள்ளிகளின் கல்வி முறையான யுஇசி கல்விச் சான்றிதழ் பாடத் திட்டத்தில் நாட்டின் தேசிய மொழியான மலாய்ப் பாடம் பிரதானக் கூறாகும் என்று மலேசிய சீனப் பள்ளிகளின் நிர்வாக வாரியமான டோங் ஸோங் இன்று தெளிவுப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதல் முறையான யுஇசி பாடத் திட்டத்தில் மலாய்மொழி கட்டாயப் பாடமாகும். அந்தச் சான்றிதழில் தேர்வு பெறக்கூடிய சீன மாணவர்கள், எஸ்பிஎம் தேர்வுக்கு நிகரான மலாய் தேர்வில் கட்டாயம் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அந்த சீன கல்வி வாரியம் விளக்கியது.
கடந்த சில வருடங்களாக சீன தனியார் இடைநிலைப்பள்ளிகளில் எஸ்பிஎம் மலாய் தேர்வுக்கு நிகரான மலாய்ப் பாடத்தில் சீன மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளது என்று டோங் ஸோங் இன்று விளக்கியது.








