Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இன்னொரு மே 13 கலவரம் என்ற கூற்றை மீட்டுக் கொண்டார் பாஸ் எம்.பி
தற்போதைய செய்திகள்

இன்னொரு மே 13 கலவரம் என்ற கூற்றை மீட்டுக் கொண்டார் பாஸ் எம்.பி

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-

பலரின் உயிர்களைக் காவு கொண்ட மே 13 இனக் கலவரத்தை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் முயற்சி செய்கிறதா என்று பாஸ் கட்சியின் பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிம், நாடாளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய வாதத்தை, அந்த எம்.பி இன்று மீட்டுக் கொண்டார்.

மே 13 கலவரத்தை உவமைக் காட்டி பேசிய அந்த வாதத்தைத் தாம் மீட்டுக் கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருந்து வந்த பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த வாரம் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர், மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துலுக்குப் பரிந்துரை செய்து இருந்தார்.

அந்த பாஸ் எம்.பிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்த வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்து இருந்த வேளையில் தம்முடைய வாதத்தை மீட்டுக் கொள்வதாக அவாங் ஹாஷிம் இன்று அறிவித்தார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுன்றத்தில் தாக்கல் செய்த 13 ஆவது மலேசியத் திட்டத்தில் சீன புது கிராமங்கள் என்ற பெயரில் சீன சமூகத்திற்குப் பிரத்தியேகமாகக் கவனம் செலுத்தப்பட்டு, அதிகமான ஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்துள்ள வேளையில் பூமிபுத்ரா சமூகத்தின் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று பாஸ் எம்.பி. அவாங் ஹஷிம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

மலாய்க்காரர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளான காரணத்தினால் மே 13 கலவரம் வெடித்தது. அந்த மே 13 கலவரத்தை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்று பாஸ் எம்.பி. முன் வைத்த வாதத்திற்கு ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த வாதத்தை பாஸ் எம்.பி. உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரை ராயர் வலியுறுத்தியிருந்தார்.

பெண்டாங் எம்.பி. பயன்படுத்திய மே 13 கலவரம் என்ற வார்த்தை மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் வெறுப்பு, கோப உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடியது என்றும், நிந்தனைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் ராயர் வாதிட்டார்.

Related News