சுபாங் ஜெயா, ஜூலை.21-
சுபாங் ஜெயாவில் நடைபெற்ற தனிப்பட்ட விருந்தோம்பல் நிகழ்வில் போதைப்பொருளை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உளவுத் துறையின் மூலம் கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் போதைப்பொருள் விநியோகித்ததாகக் கூறப்படும் அந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
அந்த தனிப்பட்ட விருந்தோம்பலில் மொத்தம் 38 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 13 பேர், அந்நிய நாட்டவர்கள். 18 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய 38 பேரில் பெரும் பகுதியினர் மாணவர்கள் ஆவர் என்று வான் அஸ்லான் விளக்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 12 பேர், போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது என்று வான் அஸ்லான் தெரிவித்தார்.








