கோலாலம்பூர், டிசம்பர்.16-
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி, போர்ட்டிக்சன் டோல் சாவடியை நோக்கிச் செல்லும் ஜாலான் ராசா சாலையில் காரில் இருந்த இருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தனிநபருக்கு பாதுகாப்புச் சேவையை வழங்கும் மெய்க்காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
ஆகக் கடைசியாகப் பிடிபட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க சந்தேகப் பேர்வழிகள், நேற்று பகான் செராயில் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
உளவுத் தகவல்கள் அடிப்படையில் சிரம்பான் மாவட்ட குற்றப்புலாய்வுத்துறை போலீசார், இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக ஏசிபி அஸஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.








