கோலாலம்பூர், டிசம்பர்.15-
நாட்டின் மேம்பாட்டை நோக்கி ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஊக்கவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. குறிப்பாக சமூகத்தின் எந்த அடுக்கு மக்களையும் புறக்கணிக்காமல், நீதியான மற்றும் மனிநேயமிக்க ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் மிக முக்கியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.
இருப்பினும், சமூக ஆர்வர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் விவேகமிக்கதாக கட்டமைக்கப்பட வேண்டும். வெறுப்பு, இழிவான தன்மை, மற்றவர்களை முட்டாளாக்குதல் அல்லது விரல்களை நீட்டுதல் போன்ற குரல்களைக் கொண்டிருக்கக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
கருத்து வேறுபாடுகள், சமூக செயல்பாடுகள் அரசியல் ரீதியாக கடுமையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய தனிநபர்களின் பங்களிப்பை காண அரசாங்கம் தொடர்ந்து ஊக்கவிக்க விரும்புகிறது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
மலேசியாவின் அனைத்துலக இஸ்லாமிய ஆய்வியல் மேம்பாட்டு நிறுவனமான IAIS ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த SM Mohamed Idris –க்காக எழுதப்பட்ட 'The Man Who Could Move Mountains: Reflections on the Social Activism of SM Mohamed Idris' என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமையேற்ற பிரதமர் தமது உரையில் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல், IAIS தலைவர் மஸ்லி மாலிக் மற்றும் பெர்மானாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வாய் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








