கிள்ளான், ஆகஸ்ட்.04-
தாங்கள் வசிக்கும் பகுதியில் குடியேறிய அந்நிய நாட்டவர் ஒருவரின் வருகையை ஏற்றுக் கொள்ள முடியாத அப்பகுதியைச் சேர்ந்த இரு ஆடவர்கள், அந்த அந்நியப் பிரஜையைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜுலை 31 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கிள்ளான், ஒஃப் ஜாலான் மேரு, ஜாலான் கூலிமில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ள வேளையில், இந்தத் தாக்குதலை நடத்திய இரண்டு நபர்களைப் போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.








