கிள்ளான், நவம்பர்.10-
மறுசீரமைப்புத் திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில், கோல கிள்ளான், பண்டாமாரானில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் கம்போங் ஜாலான் பாபான் பகுதியில், காலியாக உள்ள வீடுகள் மட்டுமே இன்று திங்கட்கிழமை அகற்றப்படும் என்று பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களிடம் போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்தக் கோரி, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் முறையிட்டனர்.
அதே வேளையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் எடுத்த தீர்மானத்தை அமல்படுத்துமாறு அமிருடினிடம் அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அந்த தீர்மானத்தின் படி, முதலில் புதிய வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தற்காலிக தடை உத்தரவைப் பெற்ற போதிலும், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி தங்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குடியிருப்பாளர்கள் செயல்படவில்லை என்றும், மாறாக அவர்கள் தங்களது இழப்பீடுகளை முதலில் கொடுக்குமாறு கேட்கிறார்கள் என்றும் லியோங் தெரிவித்துள்ளார்.








