Oct 1, 2026
Thisaigal NewsYouTube

இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடிப்பதில் போலீஸ் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது – ஐஜிபி காலிட் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடிப்பதில் போலீஸ் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது – ஐஜிபி காலிட் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர்.11-

16 ஆண்டுகளுக்கு முன், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரால் அபகரித்துச் செல்லப்பட்ட அவரது மகள் பிரசன்னா டிக்‌ஷாவைக் கண்டுபிடிக்கவும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தையும் பின்பற்றவும் போலீஸ் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகலில், இந்திரா காந்தி தன்னைச் சந்தித்த போது, இந்த வாக்குறுதியை அவரிடம் தாம் அளித்ததாகவும் காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, இந்திரா காந்தியுடன் அவரது மற்ற இரு பிள்ளைகளும், சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் மற்றும் இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுத் தலைவர் அருண் துரைசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இது குறித்து காலிட்டிடம் பேசிய துணையமைச்சர் எம். குலசேகரன், தனது மகளைக் கண்டுபிடிக்கும் இந்திரா காந்தியின் முயற்சிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பில், தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று தாம் நம்புவதாக இந்திரா காந்தியும், அருண் துரைசாமியும் தெரிவித்தனர்.

இந்திரா காந்தியின் மகளைக் கண்டறிவது உட்பட நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்று உறுதியளித்த காலிட், பிரசன்னா டிக்‌ஷாவைக் கண்டுபிடிக்க உதவும் எந்தத் தகவலையும் தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, காலிட் உடன் தாம் நடத்திய சந்திப்பு ஏமாற்றம் அளிப்பதாக இந்திரா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது மகளைக் கண்டறிவதில் போலீஸ் தரப்பு முயற்சிகளில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை என்றும் இந்திரா காந்தி சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →