பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.11-
28 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் பலவந்தத்தைப் பயன்படுத்தியாக முன்னாள் நீதித்துறை ஆணையர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
63 வயது டத்தோ முகமட் ஷாரிஃப் அபு சமா என்ற அந்த முன்னாள் நீதித்துறை ஆணையர், மாஜிஸ்திரேட் ஃபாரா அஸுரா முகமட் சாஅட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, Jalan Profesor Diraja Ungku Aziz, காம்ப்ளெக்ஸ் ஜெயா, செக்ஷன் 16 இல் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தின் கார் நிறுத்தும் இடத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த முன்னாள் நீதித்துறை ஆணையர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.








