புத்ராஜெயா, அக்டோபர்.22-
நாட்டில் நல்லாட்சியையும் நேர்மையையும் வலியுறுத்தி, ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது சில 'உயரடுக்கு' நபர்களுக்குப் பிடிக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். நாடாளுமன்ற விவாதங்களில் நேர்மையும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளும் குறைவாகவே பேசப்படுகின்றன; ஒரு சில அரசியல் வழக்குகள் மட்டும் கவனத்தை ஈர்க்கின்றன, மற்றபடி இத்தகைய விவாதங்கள் வரவேற்பைப் பெறுவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நல்லாட்சி என்பது இஸ்லாமிய போதனைகளிலும் கூட முக்கியத்துவம் அளிக்கப்படும் ஒரு புதிய விஷயம் அல்ல என்று பிரதமர் வலியுறுத்தினார். நேர்மையான நிர்வாகம் இல்லாததால் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலை தெரிவித்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 15.5 பில்லியன் ரிங்கிட் வசூலிக்க முடிந்ததைக் குறிப்பிட்டு, இதற்கு முன் எவ்வளவு தொகை இழந்தோம் என்று கேள்வி எழுப்பினார். ஊழல் தடுப்பு ஆணையம், காவற்படை வருமான வரித் துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.








