பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.10-
முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு ஏற்பட்ட இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாது என்றும், அதற்குப் பதிலாக பிசியோதெராபி (Physiotherapy) எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்படும் என்றும் இன்று அவரது தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
துன் மகாதீருக்கு தற்போது 100 வயது ஆவதால், அறுவை சிகிச்சை செய்வது உகந்ததாக இருக்காது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன், மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையான HUKM மற்றும் கோலாலம்பூர் பொது மருத்துவமனையான HKL ஆகிய மூன்று முக்கிய மருத்துவமனைகளின் நிபுணர்கள் அடங்கிய குழு இந்த முடிவை எடுத்துள்ளது துன் மகாதீரின் உதவியாளர் Sufi Yusoff தெரிவித்தார்.
துன் மகாதீர் தொடர்ந்து IJN- னில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது முதிர்வு காரணமாக அவர் குணமடைய நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி காலையில், தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியின் போது துன் மகாதீர் வழுக்கி விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.








