Sep 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவிப்பு விவகாரம்: ராயிஸ் யாத்திம் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

புதிய நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவிப்பு விவகாரம்: ராயிஸ் யாத்திம் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

Share:

முன்னாள் மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ ராயிஸ் யாத்திம் மீது, நெகிரி செம்பிலானின் புதிய யாங் டிபெர்துவான் பெசார் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாருமான 84 வயது ராயிஸ் யாத்திம், கடந்த ஜூன் 5-ஆம் தேதி மலாக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, புதிய யாங் டிபெர்துவான் பெசார் அறிவிக்கப்பட்டது தொடர்பாக தேச நிந்தனைக் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அன்றைய சந்திப்பில், நெகிரி செம்பிலானின் 12-ஆவது யாங் டிபெர்துவான் பெசாரராக துங்கு நாட்ஸாருடினின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாகவும், இனிமேல் அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு நாட்ஸாருடின் சுதந்திரமாக அரச கடமைகளை நிறைவேற்றுவார் என்றும் ராயிஸ் கூறியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெகிரி செம்பிலானில் நிலவும் சட்டம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உட்பட்டு, அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகின்றது.

தேச நிந்தனைச் சட்டம், பிரிவு 4(1)(b)-ன் கீழ் ராயிஸ் மீது இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், நீதிபதி ராஜா நூர் அடிலா ராஜா மாஹ்யால்டின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ராயிஸ் தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து, 8 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகையுடன் ஒருவர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Related News