வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் பி40 தரப்பைச் சேர்ந்த இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தலா 200 வெள்ளி மதிப்பிலான தீபாவளி பற்றுச்சீட்டு, எந்தவொரு உதவியும் கிடைக்காத ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு விளக்கம் அளித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பெருநாள் காலங்களில் ஏழை மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் ஹரிராயா, சீனப்புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று பண்டிகளுக்கு ஒரு கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக பாப்பாராயுடு தெரிவித்ததார். இதன் வாயிலாக மொத்தம் 80 ஆயிரம் பெறுநர்கள் பயன்பெறுகின்றனர்.
அந்த வகையில் வருகின்ற தீபாவளி திருநாளுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகளுக்கு 44 லட்சம் வெள்ளி மதிப்பில் மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு இந்த 200 வெள்ளி தீபாவளி பற்றுச்சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாப்பாராயுடு விளக்கினார்.
இந்த பற்றுச்சீட்டுகளை 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் விநியோகிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை ஆட்சிக்குழு நியமித்துள்ளது. தொகுதியில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இது தீபாவளி பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிக்கட்சியைச் சேர்ந்த தொகுதிகளுக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் மூலம் தீபாவளி பற்றுச்சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் வழி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் சராசரி 80 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 400 பற்றுச்சீட்டுகளை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த பற்றுச்சீட்டுகளை பெறுகின்றவர்களின் தகுதிபாடுகளையும் மாநில அரசாங்கம் மேம்படுத்தியிருப்பது மூலம் சிலாங்கூர் மாநிலத்தின் உதவித் திட்டங்களான Bingkas எனப்படும் Bantuan Kehidupan Sejahtera Selangor மற்றும் SMUE எனப்படும் Skim Mesra Usia Emas போன்ற உதவிகளை பெறாத,எந்தவொரு உதவியையும் இதுவரை கிடைக்காத ஏழை மக்களுக்கு மட்டுமே இந்த தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாக பாப்பாராயுடு விளக்கம் அளித்துள்ளார்.
தவிர 56 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை தீபாவளி பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன என்பதை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அதன் முழு விபரத்தையும் பாப்பாராயுடு தமது விளக்கத்தில் தந்துள்ளார்.








