Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சிறப்பாக நடைபெற்றது அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறப்பாக நடைபெற்றது அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா

நவ. 27-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் ஆலய வருடாபிஷேக பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கிய வேளையில் 9.15 மணியளவில் நாட்டியாஞ்சலியுடன் திருக்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு, சரியாக காலை 10.04 மணிக்கு அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும் அனைத்து சுவாமிகளுக்கும்,
கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

நாதஸ்வர, மேளதாள இசையுடன் ஆலய நிர்வாகப்பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஆலய முதன்மை குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட போது, வானில் வலம் வந்த கருடனின் ஆசிர்வதிப்பு, பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக, சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் கோவிலை வலம் வந்த நிகழ்வு நடைபெற்றது.

புனித நீர் ஊற்றப்பட்ட பின்னர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை, மலையடி வாரத்தில் உள்ள ஆதி பெரிய நாயகி அம்பாள், இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மலேசியாவில் திருவண்ணாமலை ஆதி பெரிய நாயகி அம்பாள் வீற்றிருக்கும் முதல் ஆலயமாக அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்ர தேசிக சுவாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி இக்குட முழக்கு பெருவிழா, சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →