கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-
நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தின கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக சபா மாநிலம் இன்று அறிவித்தது.
சபா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையினால் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அவர்களுக்கு முதல் உதவி வழங்கும் பொருட்டு, நாளைய மலேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வை மாநில அரசு ரத்து செய்வதாக சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அறிவித்துள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, சபா அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். வெள்ளப் பேரிடர் நிகழ்ந்த பகுதிகளில் மக்களுக்கான அனைத்து உதவிகளும் சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு சபா பிறந்த அந்த உன்னத தினக் கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக ஹஜிஜி நோர் தெரிவித்தார்.
கடந்த 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் மலாயாவுடன் இணைந்ததன் வாயிலாக மலேசியா உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.








