கோலாலம்பூர், ஜனவரி.04-
புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் சாதாரண மின் சிகரெட் கருவிகளுக்குள் திரவ வடிவிலான ஷாபு போதைப் பொருளை மறைத்து வைத்து விநியோகம் செய்த 42 வயது நபர், காவற்படையின் மின்னல் வேக சோதனையில் சிக்கி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்! சுமார் 300 பேருக்குப் போதையூட்டக்கூடிய 45 ஆயிரத்து 500 ரிங்கிட் மதிப்புள்ள 130 போதைப் பொருள் மின் சிகரெட் கருவிகளைப் பறிமுதல் செய்த காவற்படை, அந்த நபரிடமிருந்து 420 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு கார்களையும் நகைகளையும் அதிரடியாக முடக்கியதாக செபராங் பிறை தெங்கா மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே 10 குற்றப் பின்னணிகளைக் கொண்ட இந்த 'போதைப் பொருள் மன்னன்', கடந்த இரண்டு மாதங்களாக நூதன முறையில் உள்ளூர் சந்தையில் தனது விநியோகத்தை மேற்கொண்டு வந்தது காவற்படையின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போது 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த நபருக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் கூடிய கடும் பிரம்படிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.








