கோலாலம்பூர், ஜனவரி.21-
ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டான் ஶ்ரீ கிருஷ்ணன் டான், நேற்று எஸ்பிஆர்எம் அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அவர்களின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அந்நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்களது நிறுவனமும், UK-வைச் சேர்ந்த பங்குதாரர்களும், UK-வின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகமான SFO-வால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணைகள் தொடர்பாக யாரும் தங்களை அணுகவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐஜேஎம், இதற்கு மாறாக கூறும் எந்த ஓர் அறிக்கையும் தவறானவை என்று தெரிவித்துள்ளது.
அதே வேளையில், அந்த அறிக்கைகளில் ‘நிறுவன ஆலோசகர்’ என்று விவரிக்கப்பட்டுள்ள நபர், இதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறுவன பரிவர்த்தனைகளுக்காக, தொழில்முறை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்றும் ஐஜேஎம் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், UK முதலீடுகள் தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக ஐஜேஎம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.








