ஈப்போவில் படுத்த படுக்கையாக இருந்த தனது 70 வயது தாயைக் கொலை செய்ததாக 49 வயது குடும்ப மாது ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
சியூ லோங் தை என்ற அந்த மாது மீதான குற்றச்சாட்டு, கண்டனிஸ் மொழியில் வாசிக்கப்பட்டபோது, அதனை புரிந்து கொண்டதாக தலையசைத்தார். எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்பதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி இரவு 7.15 முதல் 7.30 மணிக்குள் ஈப்போ, மெங்லெம்பு, தாமான் வாங் பகுதியில் உள்ள வீட்டில், தமது தாயார் சிங் லாய் கெங் என்பவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. மேலும், மனநலப் பரிசோதனைக்காக நிபுணரிடம் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அப்போது மனநலப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.








