கிள்ளான், ஆகஸ்ட்.12-
கிள்ளான் வட்டாரத்தில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டது மூலம் உதவித் தொகைக்குரிய டீசல் முறைகேடு நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன் வழி ஒரு லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில கிளையின் தலைமையகம், நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாக அதன் இயக்குநர் முகமட் ஸுஹைரி மாட் ராடே தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் கோல கிள்ளானில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் டீசல் எண்ணெய்யை நிரப்பிக் கொண்டு இருந்த லோரியில் சோதனையிடப்பட்டது.
இரண்டாவது சோதனை, கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் ஒரு சட்டவிரோதக் கிடங்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக முகமட் ஸுஹைரி மாட் குறிப்பிட்டார்.

முதல் சம்பவத்தில் டீசல் எண்ணெய்யை நிரப்பிக் கொண்டு இருந்த கேன்வஸ் இடப்பட்டு இருந்த லோரியை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கூடுதலாக இரண்டு எண்ணெய் டாங்கிகளுடன் அந்த லோரி, மாற்றியமைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்தாக அவர் தெரிவித்தார்.

உதவித் தொகைக்குரிய டீசலைக் குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக அந்த லோரி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதில் 35க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்களும், ஒரு வங்காளதேசப் பிரஜை மற்றும் ஒரு இந்தோனேசியப் பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டதாக முகமட் ஸுஹைரி மாட் மேலும் கூறினார்.








