கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமானவருக்கு, நீதிமன்றம் சட்டப்படி மிகக்கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், உயிரிழந்த அமீருல் ஹபீஸ் ஓமரின் குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இது போன்ற பொறுப்பற்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குற்றவாளி மீதான விசாரணையை விரைந்து முடித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
2020-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தினால் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 முதல் 1 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம். மீண்டும் இதே தவறைச் செய்தால் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படும்.
மேலும் சிறைத்தண்டனையுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் குற்றவாளியே இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வரவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.








