சிரம்பான், ஆகஸ்ட்.19-
தனது மனைவியின் 28 வயது காதலனைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக சமையல்காரர் ஒருவர் சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயதுடைய அந்த சமையல்காரர், மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்தச் சமையல்காரரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் சிரம்பான், தாமான் ஶ்ரீ பாகியில் உள்ள ஒரு வீட்டில் முகமட் அமிருல் ரஷிட் முகமட் நிஸா என்பவரை மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இரண்டு இளம் பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த சமையல்காரர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தது 12 பிரம்படிகளுடன் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த சமையல்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
நீதிமன்றம் அந்த சமையல்காரருக்கு ஜாமீன் அனுமதி மறுத்துள்ளது.








