கோலாலம்பூர், செப்டம்பர்.14-
மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய அதிரடிச் சோதனையில், கவுண்டர் செட்டிங் என்ற பெயரில் வெளிநாட்டினருக்குச் சட்டத்திற்குப் புறம்பாக நுழைவு அனுமதி வழங்கிய ஊழல் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட சொகுசுப் பொருட்களும் 400 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 75 தங்கத் தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊழலில் ஈடுபட்ட ஐந்து பேர் வானூர்தி நிலையத்தில் பணிபுரியும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் தகவலை வெளியிட்டார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா. இந்த மோசடி தொடர்பில் ஆணையம் 70 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.








