ஜார்ஜ்டவுன், நவம்பர்.18-
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பினாங்கு பாலத்தில் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
25 வயது எல்மி நூர் ஸமானி என்ற அந்த நபரின் உடல், காலை 9.50 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அந்த ஆடவரின் மனைவி நூருல் நடாஷா தெரிவித்தார்.
சவப் பரிசோதனைக்காக தனது கணவரின் உடல், பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பாலத்தின் 2.8 கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் கடலில் விழுந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அந்த நபர், கடலில் விழுவதற்கு முன்னதாக பினாங்கு பாலத்தின் ஓரத்தில் தனது யமாஹா மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கைப்பேசி மற்றும் துணிப்பை ஒன்றைக் கைவிட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.








