MyPPP (மைபிபிபி) எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார துணை அமைச்சருமான டத்தோ Maglin Dennis D'Cruz காலமானார். அவருக்கு வயது 67. நெஞ்சு வலி காரணமாக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்ட Maglin Dennis D'Cruz, மரணமுற்றதாக MyPPP (மைபிபிபி) கட்சியின் மூத்த உதவித் தலைவர் டத்தோ லோகா பாலமோகன் தெரிவித்தார்.
Maglin Dennis, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக, அவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தம்முடன் தொடர்பு கொண்டு இவ்வாரம் இறுதியில் நடைபெறவிருந்த MyPPP (மைபிபிபி) கட்சியின் உச்சமன்றக்கூட்டம் தொடர்பாக பேசிக் கொண்டு இருந்ததாக லோகா பாலமோகன் குறிப்பிட்டார்.
Maglin Dennis மரணமுற்றதாக இன்று அதிகாலை 1.00 மணியளவில் தாம் தகவல் பெற்றதாக முன்னாள் கூட்டரசு பிரதேச துணை அமைச்சருமான லோகா பாலமோகன் தெரிவித்தார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு தமக்கு அறிமுகமான Maglin Dennis, நல்ல நண்பர் மட்டுமல்ல, அனைவருடன் எளிமையாக பழகக்கூடிய சிறந்த பண்பாளர். மக்களுக்கு உதவுவதை பெரும் பேராக கருதக்கூடியவர். அவரின் மறைவு பேரிழப்பாகும் என்று லோகா பாலமோகன் வர்ணித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற MyPPP கட்சியின் 67 ஆம் ஆண்டு பொதுப் பேரவையின் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவராக Maglin Dennis போட்டியின்றி வெற்றிப் பெற்றார். முன்னாள் பிரதமர் டத்தோ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கத்தில் 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார துணை அமைச்சராக Maglin Dennis பதவி வகித்ததாக லோகா பாலமோகன் நினைவுகூர்ந்தார்.







