புத்ராஜெயா, செப்டம்பர்.26-
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் பெட்ரோல் ரோன்95 சலுகை விலைத் திட்டமான பூடி95ந்தின் கீழ் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் ஒரு நிமிடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஆற்றல் வாய்ந்த மிகப் பெரிய சர்வர்கள் (servers) பொருத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்கள் எவ்விதச் சிக்கலும், சேதாரமின்றியும், பெட்ரோல் ரோன்95 எரிபொருளைப் பெறுவதற்குத் திறன் வாய்ந்த சர்வர்கள் பெரிதும் உதவும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனும் சாரா உதவித் திட்டத்திற் பயன்படுத்தப்படும் சர்வர்களை விட இது 10 மடங்கு வேகமானது என்று நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
சாரா உதவித் திட்டத்தில் நிமிடத்திற்கு 3 ஆயிரம் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் பூடி95 சர்வர்கள், நிமிடத்திற்கு 30 ஆயிரம் பரிவர்த்தனைகள் என்ற அளவில் 10 மடங்கு அதிகமாகச் செயல்படுத்த வல்லதாகும் என்று நிதி அமைச்சில் இன்று அதன் பணியாளர்களின் மாதாந்திரக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற போது டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
பூடி95 பெட்ரோல் விலை சலுகைத் திட்டத்தின் மூலம் செல்லத்தக்க வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டுள்ள 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு விலையில் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்கலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த பூடி95 திட்டம் நாளை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படவிருகிறது. நாளை சனிக்கிழமை, சுமார் 3 லட்சம் இராணுவத்தினர், போலீஸ்காரர்கள் இந்த சலுகையைப் பெறுவார்கள் என்று பிரதமர் விளக்கினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா உதவியைப் பெறும் 5 மில்லியன் பேர், இந்த சலுகையைப் பெறுவார்கள் என்றும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16 மில்லியன் மலேசியர்களும் இந்த சலுகைத் திட்டத்தில் பயனடைவர் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.








