கோலாலம்பூர், அக்டோபர்.14-
நாட்டில் லஞ்ச ஊழலைத் துடைத்தொழிக்காமல் அப்படியே விட்டு விட்டால், கடந்த செப்டம்பர் மாதத்தில் நேப்பாளத்தில் நடந்தது போன்று பொது அமைதியின்மை நிலையை மலேசியாவும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
லஞ்ச ஊழலும், அநீதியும் எப்படி பொதுமக்களைச் சினமடையச் செய்யும் மற்றும் அரசாங்கங்களைச் சீர்குலைத்து விடும் என்பதற்கு நேப்பாளத்தில் நடந்த சம்பவம் ஒரு நினைவுறுத்தலாக விளங்குகிறது என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
சிலாங்கூர், பாங்கியில் நடைபெற்ற லஞ்ச ஊழல் தொடர்பிலான நிகழ்ச்சியில் உரையாற்றுயில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.
லஞ்ச ஊழலுக்கு எதிராக மக்கள் கிளந்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நேப்பாளம் ஓர் உதாரணமாகும். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேப்பாள அரசாங்கம் ஆட்டம் கண்டதோடு, அந்நாட்டின் நிதி அமைச்சர், ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.








